Jump to content

கிரான் பழைய மாணவர் யாப்பு

அமைப்பின் பெயர்:                 கிரான் பழைய மாணவர் சமூக அமைப்பு.

மாவட்டம்:                                  மட்டக்களப்பு.

பிரதேச செயலாளர் பிரிவு: கோறளைப்பற்று தெற்கு, கிரான்

செயற்படும் பிரதேசம்:          கிரான் கிராமம்

தொலைநோக்கு:-

கிரான் பாடசாலைகளில் கல்வி கற்று வெளியேறிய 18 வயதிற்கு மேற்பட்ட பழைய மாணவர்களை இணைத்துக் கொண்டு கிரானிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களிடையே கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, விளையாட்டு மற்றும் சமூக சமய விழுமியங்கள் போன்றவற்றில் உலக மயமாக்கலுக்கு ஏற்ப மேம்பாட்டினை ஏற்படுத்தி அதனூடாக சிறப்பான ஓர் கல்விச் சமூகத்தை உருவாக்குதல்.

அமைப்பின் நோக்கங்கள் :

1. கிரான் பாடசாலைகளில் கல்வி கற்று வெளியேறிய 18 வயதிற்கு மேற்பட்ட பழைய மாணவர்களை அமைப்பின்பால்  இணையச்செய்வதன் மூலம் அவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையேயான உறவினை மேம்படுத்தல்

2. அமைப்பிற்கும் பாடசாலை  சமூகத்திற்கும்  மற்றும் எனைய பொது அமைப்புக்களுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வினையும்  நல் உறவினையும்  ஏற்படுத்துதல்.

3. பாடசாலைகளின் தரத்தினை மேம்படுத்துவற்கான  பங்களிப்பினை பாடசாலை நிருவாகங்களுக்கு வழங்குதல்.

4. சமூக சேவைகளில் ஈடுபடுதல்.

5. பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையில் இணைப்பினை எற்படுத்துதல்.

6. மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கு தொழில் மற்றும் மேற்படிப்புக்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் ஓழுங்கமைத்தல்.

7. பாடசாலைகளுடன் இணைந்ததான விழாக்கள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளையும்  நடாத்துதல்.

8. மருகிச் செல்கின்ற பாரம்பரிய கலைகள்,கலாசாரங்கள் பண்பாடுகள் மற்றும் சமூக சமய விழுமியங்கள என்பனவற்றினை மேம்மடுத்துதல்.

9. விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பாடசாலை மாணவர்களினதும் பழைய மாணவர்களினதும் விழையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

செயற்பாடுகள்:

1. பழைய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அமைப்பின்பால் ஒன்றிணைத்தல்.

2. கற்றல் செயற்பாட்டிற்கு தேவையான மேலதிக வகுப்புக்களை இலவசமாக நடாத்துதல்.

3. தரம் 05, தரம் 09,  க.பொ.சாதாரண தரம், க.பொ.உயர் தரம் கற்கின்ற மாணவர்களுக்கான விஷேட வகுப்புக்ளை ஒழுங்குபடுத்துதல்.

4. ஆங்கிலம், சிங்களம், கணினி, தகவல்தொழில்நுட்பம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு திறமையான ஆசிரியர்களை அழைத்து மேலதிக வகுப்புக்களை ஒழுங்கமைத்தல்.

5. குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு தேவையான வசதிகளை இலவசமாக செய்து கொடுத்தல்.

6. பாடசாலையின் பௌதீக வளங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை எம்மால் இயன்றவரை பூர்த்தி செய்து கொடுத்து கற்பித்தல் செயற்பாடுகளை முழுமையாக்குதல்.

7. இணைப்பாடவிதான செயற்பாடுகளில்; ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தேவையான வசதிகளையும், பயிற்சிகளையும் பெற்றுக் கொடுத்தல்.

8. பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பாராட்டுக்களையும், கௌரவிப்புக்களையும் நடாத்துதல்.

9. பாடசாலைகளில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு சேவை நலன் பாராட்டுக்களை நடாத்தி கௌரவித்தல்.

10. பாடசாலை தினம், வாணி விழா என்பனவற்றை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுதல்.

11. சிரமதானம் போன்ற சமூக பொதுவேலைகளில் மாணவர்களையும் இணைத்துக்கொண்டு செயற்படுதல்.

12. யுத்தம் மற்றும் இயற்கையினால் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துகை செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்.

13. சமூகத்தில் தேவை உடையவர்களை இனங்கண்டு அவர்களை உரிய அரச அலுவலகங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல்.

14. சமூக விழிப்பூட்டல் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

15. கல்வி கற்று வெளியேறிய மாணவர்களின் மேற்படிப்புக்கள் மற்றும் தொழில் பயிற்களில் இணைந்து கொள்வதற்கு உதவி செய்தல்.

16. பாடசாலைச் சமூகத்துடன் பெற்றோரையும், பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து புரிந்துணர்வின் ஊடாக ஒற்றுமைப்படுத்தி சீரான கல்விச் செயற்பாட்டினை மேற்கொள்ளல்.

17. மாணவர்கள் பயன் பெறும் வண்ணம் பாடசாலை நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்.

உறுப்புரிமை:-

கிரான் பாடசாலைகளில் கல்வி கற்று வெளியேறிய 18 வயதிற்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் சங்கத்தின் விண்ணப்ப படிவத்துடன் சந்தாப்பணத்தினையும் செலுத்துவதனூடாக அங்கத்தவராக இணைந்துகொள்ளலாம். உறுப்புரிமையானது கீழ்வரும் இரண்டு அடிப்படையில் அமைந்திருக்கும். 

1. சாதாரண உறுப்பினர்- ​

கிரான் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்கள் அமைப்பினால் தீர்மானிக்கப்படும் வருடாந்த சந்தாவில் அரையாண்டுக்கான சந்தாவை அல்லது ஒரு வருடத்திற்கான சந்தாவினை விண்ணப்பப் படிவத்துடன் செலுத்தி சாதாரண அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம்.

​2. ஆயுட்கால உறுப்பினர்-

​கிரான் பாடசாலைகளில் கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்கள் அமைப்பினால் தீர்மானிக்கப்படும் ஆரம்பச் சந்தாவை விண்ணப்பப் படிவத்துடன் செலுத்தி அயுட்கால அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம்.

 உறுப்பினர் சந்தா செலுத்துதல்:-

1. சாதாரண உறுப்பினர்:-

​அமைப்பினால் தீர்மானிக்கப்படும் வருடாந்த சந்தாவை தொடர்ச்சியாக அரையாண்டுக்கு ஒரு தடைவ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு தடவை செலுத்தி உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்.​

2. ஆயுட்கால உறுப்பினர்:-

அமைப்பினால் தீர்மானிக்கப்படும் இரண்டு வருடாத்திற்கான சந்தாவினை தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை செலுத்தி உறுப்புரிமையை புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்.

அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒருவர் மரணிக்கும் பட்சத்தில் அவருக்கான அஞ்சலியினை அமைப்பினூடாக செலுத்தி கௌரவப்படுத்துதல் வேண்டும்.

உறுப்புரிமை இழத்தல்:-

அமைப்பின் விதிகளுக்கு முரனாக செயற்படுபவர்களை ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி அதனூடாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு அமைவாக அமைப்பிலிருந்து நீக்குதல்.

அமைப்பினால் அறிவிக்கப்படும் தினத்திற்குள்  வருடாந்த சந்தாவினை செலுத்தாத சாதாரண அங்கத்தவர்களும், இரண்டு வருடத்திற்கான சந்தாவினை செலுத்தாத ஆயுட்கால அங்கத்தவர்களும் அங்கத்துவத்தை இழப்பர்.

அங்கத்துவத்தை இழந்த ஒருவர் மீண்டும் அங்கத்துவத்தினைப் புதுப்பிப்பதற்கு கோரும் பட்சத்தில் பொதுச்சபையில் தீரமானிக்கப்படுகின்ற தண்டப் பணத்தினையும் நிலுவையாக இருக்கும் சந்தாவினையும் செலுத்துதல் வேண்டும்.

பொதுக் கொள்கைகள்:

எமது அமைப்பு செயற்படும் பிரதேசத்திலுள்ள அனைத்து இன,மத,சமூக கலாசார பண்பாட்டு அம்சங்களுக்கு மதிப்பளித்தலும் பேணிப்பாதுகாத்தலும்.

சங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் அரச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கும்.

நிருவாக சபை:-

1. தலைவர்,
2. செயலாளர்
3. பொருளாளர்,
4. உபதலைவர்,
5. உபசெயலாளர் மற்றும் எட்டு நிருவாக சபை உறுப்பினர்களும் உட்பட பதின்மூன்று பேர் கொண்ட நிருவாக சபை. 

நிருவாக சபை தெரிவு:

பொதுக் கூட்டம் கூட்டப்பட்டு அதனூடாகவே நிருவாக சபைத் தெரிவு நடைபெற வேண்டும்.

​அமைப்பில் அங்கத்துவம் பெற்றவர்கள் மாத்திரமே நிருவாக சபையில் அங்கம் வகிக்கலாம். அத்துடன் நிருவாக சபை தேர்வின் போது அங்கத்தவர்கள் மாத்திரமே முன்மொழிவதற்கும் வழிமொழிவதற்கும் உரித்துடையவராக இருப்பர்.

​நிருவாக சபை தெரிவின் போது போட்டி ஏற்படும் பட்சத்தில் பெரும்பாண்மை விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்

நிருவாக சபை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.

நிருவாக சபையின் செயற்பாடு திருப்பிகரமற்றது என கருதப்படும் பட்சத்தில் பொதுக்கூட்டம் கூட்டப்ட்டு அக் கூட்டத்திற்கு சமூகம் தரும் உறுப்பினர்களில் 2:3 பெரும்பான்மையினை பெற்று நிருவாக சபை மாற்றத்தினை மேற்கொள்ளலாம்.

நிருவாக சபையில் உள்ளவர்கள் தகுந்த காரணங்களுடன் முன்னறிவித்தலின்றி மூன்று கூட்டங்களுக்கு தொடர்ந்து சமூகமளிக்காத பட்சத்தில் நிருவாக சபையிலிருந்து விலக்கப்படுவர்.

இணைப்பாளர்:-

​அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் செயல் திட்டங்களுக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் இணைப்பாளர்களை நியமிக்க முடியும்.

அமைப்பின் நிதி மற்றும் வழங்கப்படும் பொறுப்புக்களின் தன்மைக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்க முடியும். இது தொடர்பிலான தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் அல்லது நிருவாக சபை கூட்டத்தில் எடுக்கப்படுதல் வேண்டும்.

​தேர்வு செய்யப்படுபவர் அவ் வேலைத் திட்டங்களுக்கு பொருத்தமானவராகவும், கல்வித் தகைமையுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

இவர் நிருவாக சபைக்கு கட்டுப்பட்டவராகவும் பொறுப்புக் கூற வேண்டியவராகவும் இருத்தல் வேண்டும்.

கணக்காளர் :-

தேவை ஏற்படும் பட்சத்தில் அமைப்பின் நிதி செயற்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களை கருத்தில்கொண்டு  கணக்காளரை நியமிக்க முடியும்.

அமைப்பின் நிதி மற்றும் வழங்கப்படும் பொறுப்புக்களின் தன்மைக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்க முடியும். இது தொடர்பிலான தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் அல்லது நிருவாக சபை கூட்டத்தில் எடுக்கப்படுதல் வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர் அப்பதவிக்கு பொருத்தமானவராகவும், கல்வித் தகைமையுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

இவர் நேரடியாக பொருளாளரின் வழிநடத்துதலுக்கு உட்பட்டவராகவும் நிருவாக சபைக்கு கட்டுப்பட்டவராகவும் பொறுப்புக் கூறுபவராகவும் இருத்தல் வேண்டும்.

யோசகர் :-

யோசகராக மட்/ககு/மகாவித்தியாலயத்தின் அதிபர் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

​வாக்களிக்கும் சந்தர்ப்பங்களில் யோசகர் வாக்களிப்பில் பங்கு கொள்ள முடியாது.

யோசகரின் கடமைகள்:- 

அமைப்பு சிறந்த முறையில் செயற்படுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.

ஆலோசகர்கள்:-

இவர்கள் பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்றவராகவும்  பாடசாலை நலனில் அக்கறை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இவர்கள் வாக்களிப்பு இடம்பெறும்போது வாக்களிக்க முடியாது.

ஆலோசகர்களாக தெரிவு செய்யப்படுபவர்கள் பொதுக்கூடட்த்தில் கலந்து கொள்ளாத ஓரு பொருத்தமான நபராகவும் அமையலாம்.

ஆலோசகர்களின் கடமைகள்:

சிறப்பான நிருவாக கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இயங்கச் செய்வதற்குமான ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்குதல்.

அமைப்பின் இலக்கை அடைவதற்கு பொருத்தமான திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளையும் நெறிப்படுத்தல்களையும் வழங்குதல்.

அமைப்பபின் செயல் திட்டம் தொடர்பில் மீளாய்வுகளை மேற்கொள்ளுதலும் ஆலோசனைகளை வழங்குதலும்.

கணக்குப் பரிசோதகர் குழு:

கணக்குப் பரிசோதகர்களாக இருவர் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.

இவர்கள் பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்படுதல் வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்கள் இப்பதவிக்கு பொருத்தமான கல்வித்தகைமையும் அனுபவமும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

இவர்கள் காலாண்டு மற்றும் வருடாந்த கணக்கறிக்கைகளை பரிசோதித்து ஒப்புதல் அளிப்பதுடன் அறிக்கை சமர்ப்பிக்கவும் வேண்டும்.

கணக்கு பரிசோதகராக தேர்வு செய்யப்படுபவர் அங்கத்தவராக இல்லாத பட்சத்தில் அவர் வாக்களிப்பு நடைபெறும் சந்தர்ப்பங்களில் வாக்களிப்பில் பங்கு கொள்ளமுடியாது.

நிருவாக சபையின் பொறுப்புக்களும் கடமைகளும்:-

பொதுவான கடமைகள்

அமைப்பின் இலக்கினை அடையும் வகையில் திட்டங்களைத் தீட்டி அதன்பால் அங்கத்தவர்களைச் சேர்த்துச் செயற்படல்.

இலங்கையிலும் வெளி நாடுகளிலும் வசிக்கின்ற சகல பழைய மாணவர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தி அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளல்.

அமைப்பின் சார்பில் தீர்மானிக்கப்படும் செயல்திட்டங்களை திட்டமிட்டு அவற்றைச் செயற்படுத்துதல், கண்காணித்தல்.

கூட்டத் தீர்மானங்களை யாப்பிற்கேற்ப நடைமுறைப்படுத்துதலும், அறிக்கையிடலும் மற்றும் பொறுப்புக் கூறுதலும்.

பழைய மாணவர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதலும், உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதலும்.

அமைப்பின் அனைத்துவிதமான செயற்பாடுகளுக்கும் வகைகூறுபவர்களாக இருப்பர்.

தலைவரின் கடமைகள்:

அமைப்பின் இலக்கை நோக்கிய செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கி முன்னின்று வழி நடத்திச் செல்லல்.

கூட்டங்கள், விழாக்கள், வைபங்கள் என்பவற்றுக்கு தலைமை தாங்குதலும், அதற்கான வழிகாட்டல்களை நெறிப்படுத்துதலும்.

கூட்ட தீர்மானங்களையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்துதலும், மேற்பார்வை செய்தலும்.

இவ் யாப்பில் எந்தவொரு பகுதியிலும் இவருக்கென குறித்து ஒப்படைக்கப்பட்ட பணிக்கூறுகளை செயற்படுத்துபவராக இருப்பார்.

உப தலைவரின் கடமைகள்:

​தலைவர் சமூகங் கொடுக்க முடியாத பட்சத்தில் அவரின் கடமைகளை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துதலும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்குதலும்.

மேலும் இவ் யாப்பில் எந்தவொரு பகுதியிலும் இவருக்கென குறித்து ஒப்படைக்கப்பட்ட     பணிக்கூறுகளை செயற்படுத்துபவராக இருப்பார்.

செயலாளரின் கடமைகள்:

யாப்பு விதிகளுக்கு அமைவாக கூட்டங்களை கூட்டுதல்.

அமைப்பின் அனைத்து ஆவணங்களையும் பேணிப்பாதுகாப்பவராகவும், முற்றிலும் பொறுப்புக் கூறுபவராகவும் இருப்பார்.

தகுந்த முறையில் கடிதங்களை அனுப்புதல் மற்றும் கோவைப்படுத்துதல்.

உள் வரும் கடிதங்களுக்கான பதில் கடிதங்களை ஐந்து நாட்களுக்குள் அனுப்புதல் மற்றும் கோவைப் படுத்துதல் வேண்டும்.

கூட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல்.

அமைப்பின் மின்னஞ்சலை அமைப்பின் தொடர்பாடலுக்காக கையாள்பவராகவும் அதன்பால் பொறுப்புக் கூறுபவராகவும் இருப்பார்.

மேலும் இவ் யாப்பில் எந்தவொரு பகுதியிலும் இவருக்கென குறித்து ஒப்படைக்கப்பட்ட     பணிக்கூறுகளை செயற்படுத்துபவராக இருப்பார்.   

உப செயலாளரின் கடமைகள்:-

செயலாளர்; சமுகங் கொடுக்க முடியாத பட்சத்தில் அவரின் கடமைகளை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துதலும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்குதலும்.

மேலும் இவ் யாப்பில் எந்தவொரு பகுதியிலும் இவருக்கென குறித்து ஒப்படைக்கப்பட்ட     பணிக்கூறுகளை செயற்படுத்துபவராக இருப்பார்.

பொருளாளரின் கடமைகள்:-

கணக்குகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகளை சரியாகப் பதிவு செய்தலும் அதற்குரிய ஆவணங்களைப் பாதுகாத்தலும்.

அங்கிகரிக்கப்பட்ட சிட்டைகளுக்கூடாக கொள்வனவு செய்தல் வேண்டும்.

நன்கொடைகள், நிதி அறவீடுகள், அன்பளிப்புக்கள் என்பவற்றுக்கான பற்றுச் சிட்டைகள் தாமதமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

தேவையின்றி பணத்தினை கையிருப்பாக வைத்திருக்காமல் உரிய காலத்திற்குள் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தல் வேண்டும்.

காலாண்டுக்கு ஒரு முறை கணக்கறிக்கை கணக்குப் பரிசோதகர்களின் ஒப்பத்துடன் நிருவாகசபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அத்துடன் வருடாந்த கணக்கறிக்கை ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

மேலும் இவ் யாப்பில் எந்தவொரு பகுதியிலும் இவருக்கென குறித்து ஒப்படைக்கப்பட்ட     பணிக்கூறுகளை செயற்படுத்துபவராக இருப்பார்

கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவருடைய நிதி கையாளுகை தொடர்பில் கண்காணித்தலும், அவரது மாதாந்த அறிக்கைகளை பரிசீலித்து சபைக்கு சமர்ப்பித்தலும்.

நிருவாக சபை உறுப்பினர்களின் கடமைகள்:

கூட்டங்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகமளித்தல்.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

கடமைகளை பொறுப்பேற்று நிறைவாக உரிய காலத்திற்குள் நிறைவேற்றுதல்.

சரியான திட்டங்களுக்கு அங்கிகாரம் வழஙகுதல்.

பொறுப்பேற்கும் பணிகளுக்கான பொறுப்புக்கூறும் தன்மை உறுப்பினர்கள் தனித்தும், கூட்டாகவும் பொறுப்புக் கொண்டவர்களாக காணப்படுவர்.

கூட்டங்களில் கருத்துத் தெரிவிக்கையில் ஏனைய உறுப்பினர்களின் சுய கௌரவத்தை பாதிக்காதவகையில் கண்ணியமாக நடந்துகொள்ளல் வேண்டும்.

எடுக்கப்படுகின்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுதல்.

அங்கத்தவர்களின் கடமைகள்:

கூட்டங்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகமளித்தல்.

செயல் திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பும் உதவியும் வழங்குதல்.

வேலைகளை பொறுப்பேற்று நிறைவாக நிறைவேற்றுதல்.

ஒப்படைக்கப்படும் பணிகளுக்கும், சொத்துக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருத்தல்.

அமைப்பிற்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணும் வகையில் காரியங்களில் ஈடுபடுதல் கூடாது.

கூட்டங்களில் கருத்துத் தெரிவிக்கையில் ஏனைய உறுப்பினர்களின் சுய கௌரவத்தை பாதிக்காதவகையில் கண்ணியமாக நடந்துகொள்ளல் வேண்டும்.

எடுக்கப்படுகின்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுதல்.

நிதியீட்டல் செயற்பாடுகள்:

உறுப்பினர்களின் சந்தாப்பணம்.
நன்கொடைகள்.
அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் மூலமும் நிதியினைப் பெறமுடியும்.

மக்களுக்கும் அமைப்பிற்கும் பயன்தரும் திட்டங்களில் அமைப்பு ஈடுபடலாம்.

நிதி நிருவாகம்:

நிருவாகக்குழுவினால் நிருவகிக்கக் கூடிய வகையில் முழு நிதியியல் அதிகாரத்தையும் சங்கம் கொண்டிருக்கும். அமைப்பானது  நிதியை பொருளாளர் ஊடாக நிருவகிக்கும்.

பொருளாளரானவர் சங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்காக நிருவாகக் குழுவுக்கு முழுமையாகவும், விசேடமாகவும், தனித்தும், பொறுப்பானவராக வகைகூறுபவராக பதிலளிப்பவராக இருப்பார்.

அரச வங்கி ஒன்றில் அமைப்பின் பெயரில் சேமிப்பு கணக்கு திறக்கப்ப்டுதல் வேண்டும். தேவை ஏற்படும் பட்சத்தில் நிருவாக சபையின் அனுமதியைப்பெற்று நடைமுறைக் கணக்கினை திறக்கமுடியும்.

வங்கிக் கணக்கில் நிதிகள் வைப்புச் செய்யப்பட்டு அதனூடாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

அமைப்பினால் மேற்கொளளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளுக்கும் அங்கிகரிக்கப்பட்ட சிட்டைகள், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

வங்கியில் இருந்து பணம் பெறப்படும் போது தலைவருடன் பொருளாளர் அல்லது தலைவர் இல்லாதபட்சத்தில் செயலாளருடன் பொருளார் இணைந்து ஒப்பமிட்டுப் பெறப்படுதல் வேண்டும்.

ரூபா 5,000/- இற்கு மேற்பட்ட தொகையினை செலவு செய்வதாயின் நிர்வாக சபையின் அங்கிகாரம் பெறப்படுதல் வேண்டும்.

பொருளாளர் கையிருப்பாக ரூபா 3000/- இற்கு மேற்பட்ட நிதியை கையிருப்பாக வைத்திருக்க முடியாது.

சேகரிக்கப்படுகின்ற நிதியை மூன்று வேலை நாட்களுக்குள் வங்கியில் வைப்பிலிட்டு அதற்கான சிட்டை கோவைப்படுத்தப்படல் வேண்டும்.

உரிய முறையில் செலவு விபரம் காட்டப்படாத பட்சத்தி;ல் அப் பணத்திற்கு பொருளாளர் பொறுப்புக் கூறுதல் வேண்டும்.

யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களுக்கு மட்டுமே நிதி செலவிடப்படுதல் வேண்டும்.

விழாக்களை விட கல்விச் செயற்பாட்டிற்கே கூடுதலான நிதி பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

நிதியாண்டாக நவம்பர் மாதம் காணப்படும்.

வருமானம் தரும் அனைத்துத் திட்டங்களும் அமைப்பின் பெயரிலே அமைய வேண்டும், இதனூடாக பெறப்படும் இலாபம் அமைப்பிற்கே சொந்தமானதாகும்.

கூட்டங்கள்:

நிர்வாக சபைக் கூட்டம்:

1. நிருவாக சபைக்கூட்டமானது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்படுதல் வேண்டும்.

2. கூட்ட தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் செயலாளரினால் அறிவித்தல் வழங்கப்பட வேண்டும்.

3. நிருவாக சபையினரில் 2:3 பெரும்பாண்மையினர் சமூகமளிக்கும் பட்சத்திலே கூட்டத்தினை நடாத்த முடியும்.

4. கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு அதற்கமைவாக கூட்டம் நடைபெறுதல் வேண்டும்.

5. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சமுகமளிக்கும் உறுப்பினர்களில் 2:3 பெரும்பாண்மையினைப் பெற்று நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

வருடாந்த பொதுக்கூட்டம்:

1. பொதுக்கூட்டமானது வருடத்திற்கு ஒருமுறை கூட்டப்படுதல் வேண்டும்.

2. கூட்ட தினத்திற்கு ஏழு நாட்களுக்கு முன் செயலாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டு கூட்டம் கூட்டப்படுதல் வேண்டும்.

3. 20 மேற்பட்ட அங்கத்வர்கள் சமூகமளிக்கும் பட்சத்திலே கூட்டத்தினை நடாத்த முடியும்.

4. கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு அதற்கமைவாக கூட்டம் நடைபெறுதல் வேண்டும்.

5. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சமுகமளிக்கும் உறுப்பினர்களில் 2ஃ3 பெரும்பாண்மையினைப் பெற்று நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

6. வருடாந்த செயல் திட்டங்கள் தொடர்பிலான தீர்மானங்கள் இக் கூட்டத்திலே நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

7. வருடாந்தம் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வும் இக் கூட்டத்தில் நடைபெறுதல் வேண்டும்.

8. வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெறப்படுதல் வேண்டும்.

விசேட நிருவாக சபைக் கூட்டம்:

1. தேவை ஏற்படும் பட்சத்தில் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க உடனடியாக கூட்டம் கூட்டமுடியும்.

2. நிருவாக சபையினரில் 2:3 பெரும்பாண்மையினரின் வேண்டுகோளுக்கிணங்க உடனடியாக  கூட்டம் கூட்ட முடியும்.

விசேட பொதுக்கூட்டம்:

1. தேவை ஏற்படும் பட்சத்தில் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க மூன்றுநாட்கள் முன் அறிவித்தலுடன்  கூட்டம் கூட்டமுடியும்.

2. நிருவாக சபையினரில் 2:3 பெரும்பாண்மையினரின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று நாட்கள் முன் அறிவித்தலுடன்  கூட்டம் கூட்டமுடியும்.

3. அங்கத்தவர்களில் 2:3 பெரும்பாண்மையினரின் வேண்டுகோளுக்கிணங்க மூன்றுநாட்கள் முன் அறிவித்தலுடன்  கூட்டம் கூட்ட முடியும்.

தகவல் வெளியீடு மற்றும் தொடர்பாடல்:-

அமைப்பின் கடிதத் தொடர்பாடல்கள் கடிதத் தலைப்பினூடாக ( Letter Head) மேற்கொள்ளுதல் வேண்டும்.

அமைப்பின் தீர்மானங்கள், அறிக்கைகள் வெளியிடப்படும் போது ஆவணங்களில் தலைவர், செயலாளர் கையொப்பமிட்டு முத்திரை பதிக்கப்படுதல் வேண்டும்.

அமைப்பின் பெயரில் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டு அதனூடாக தொடர்பாடல்களை அமைப்பின் யாப்புக்கு அமைவாக செயலாளர் செயற்படுத்துதல் வேண்டும்.

அமைப்பின் பெயரில் இணையத்தளம், முக நூல் (Face book) என்பனவற்றை உருவாக்கி அமைப்பின் யாப்புக்கு அமைவாக தகவல்களை வெளியிடுவதற்கும் இவற்றினூடாக வெளித்தொடர்புகளை ஏற்படுத்தவும் முடியும்.

நிருவாக சபையினால் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு சபையின் அங்கிகாரத்துடன் அவர் இவற்றினை செயற்படுத்தவும் முடியும்.

சொத்துக்கள்:

இவ் அமைப்பின் சொத்துக்கள் யாவும் அமைப்பிற்கே சொந்தமாகும் இவற்றினை தனி நபரின் சொந்த நலனுக்காக பயன்படுத்தக் கூடாது.

அமைப்பின் சொத்துக்களை சேதம் விளைவிப்பதும் திருடுவதும் பாரிய குற்றமாகக்கொள்ளப்படும்.

அமைப்பு கலைக்கப்படும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சொத்துக்கள் யாவும் கிரான் பாடசாலைகளுக்கு சொந்தமாக்கப்படுதல் வேண்டும்.

யாப்பு விதிகளின் மாற்றம்:-

யாப்பினை திருத்தியமைக்க வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் பொதுக் கூட்டம் கூட்டப்பட்டு  அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் 2:3  பெரும்பான்மையினரின் சம்மதத்தினைப் பெற்று மேற்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

இவ் யாப்பை திருத்தியமைக்கும் அதிகாரம் அமைப்புக்கு மாத்திரமே உள்ளது.

 ..................................                                           ......................................                               ......................................... 

​   தலைவர்                                                        செயலாளர்                                      பொருளாளர்

யாப்பு ஆக்கக் குழு      

1. செல்வி.P.ஜெயவீரரெட்ணம்                               5. திரு.பூபாலப்பிள்ளை அருணா                   2. திரு.யோகராசா ஜெயக்குமார்                           6. திரு.சண்முகம் கதிரவன்
3. திரு.குமாரவேல் புருசோத்தமன்                      7. திரு.செல்வரெட்ணம் செல்வசுதேசன்     4. திரு.செல்வராசாசெல்வஉதயகரன்                8. திரு.மார்க்கண்டுவேணுகோபன்                               

Your details